
ஸ்ரீநகர்,
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது.
அதேவேளை, இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று மாலை 5 மணியளவில் அறிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தானுடனான போர் இன்று மாலை 5 மணி முதல் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும், போர் நிறுத்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஜம்முவில் உள்ள ராணுவ தளம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்முவின் நாக்ரோட்டாவில் உள்ள ராணுவ நிலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், ஜம்முவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.