
சென்னை,
ஜம்மூ காஷ்மீர் முதல் மந்திரிஉமர் அப்துல்லா நினைவிடம் செல்ல முயன்றபோது அவரை உள்ளே செல்ல விடாமல் போலீசார், நுழைவு வாயிலை பூட்டினர். தடுக்கப்பட்டதால் சுவர் ஏறி குதித்து நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். உமர் அப்துல்லா சுவர் ஏறி குதித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெகு வேகமாக பரவியது. பாதுகாப்பு காரணங்களுக்காக அம்மாநில முதல் மந்திரி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜம்மூ காஷ்மீர் முதல் மந்திரி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல் மந்திரி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தடுக்க வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் அவர் சுவர் ஏறிக் குதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது ஒரு மாநிலம் அல்லது ஒரு தலைவரைப் பற்றியது மட்டுமல்ல. |தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை, பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. எந்த மக்கள் பிரதிநிதிக்கும் இது நடக்கலாம்."