
திருச்சி,
திருச்சி காட்டூரில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த விழாவின் நாயகனான மணமகன் சிவகுமார் அவரது தாய் மற்றும் தந்தை பேச்சை கூட கேட்க மாட்டார், நான் சொன்னால்தான் கேட்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது கூறினார். மணமகனிடம் நான் தாலி எடுத்து கொடுத்தபோது அவரது அம்மா அவரிடம் இரண்டு முடிச்சு மட்டும்தான் போடவேண்டும் என கூறினார். ஆனால் அதை கேட்காமல் மூன்று முடிச்சுகளையும் மணமகனே போட்டுவிட்டார். பின்னர் தான் தெரிந்தது மணமகள் மூன்று முடிச்சுகளையும் நீங்கள்தான் போட வேண்டும் என கூறியுள்ளார் என்பது. அந்தவகையில் மணமகன் சிவகுமார் இப்போதே தனது மனைவியின் பேச்சை கேட்க தொடங்கி விட்டார் என நினைக்கிறேன்.
மனைவியின் பேச்சை கேட்பதில் தவறு கிடையாது. ஆனால் ஒரேயடியாக மனைவி பேச்சை மட்டும் கேட்காமல் தாய்-தந்தை பேச்சையும் கேட்க வேண்டும். அரசியலில் அப்பா-மகன் உறவு மிகவும் முக்கியமானது. அப்பா பேச்சை கேட்காத மகன் என்று பெயர் வாங்கி விடக்கூடாது.
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக, மகளிர், மாணவர்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் மாணவர்கள் மற்றும் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்னும் 8 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் கழகம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நமது அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்று விளக்கி கூறும் பணியை ஓரணியில் திரண்டு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.