மனைவியுடன் தியேட்டரில் படம் பார்த்த புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு - திருமணமான ஒரே மாதத்தில் பரிதாபம்

5 hours ago 2

சென்னை மந்தைவெளி எஸ்.பி.ஐ. குடியிருப்பில் வசித்து வந்தவர் மெல்வின் (29 வயது). எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் அலுவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு பட்டினப்பாக்கத்தைச்சேர்ந்த காயத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மதியம் புதுமண தம்பதிகளான மெல்வினும், காயத்ரியும் மோட்டார் சைக்கிளில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள மெரினா மாலுக்கு வந்தனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள தியேட்டர் ஒன்றில் தம்பதியினர் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது மெல்வினுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மெல்வினை கொண்டு சென்றனர்.

அங்கு மெல்வினை பரிசோதித்த மருத்துவர், அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி காயத்ரி, மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த கேளம்பாக்கம் போலீசார் மெல்வினின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உண்மையிலேயே அவர் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article