
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டு பயணிகளும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு:
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். சுற்றுலா பயணிகளை தாக்குவது என்பது கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்;
பகல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
ராகுல் காந்தி:
காஷ்மீர் தாக்குதல் சம்பவம் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது. .பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டு மொத்த நாடும் ஒன்றுபட்டு உள்ளது. காஷ்மீரில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது எனக் கூறுவதை விட்டுவிட்டு, மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த கொடூரமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். அப்பாவி இந்தியர்கள் உயிர் இழக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. வீரர்களின் ரத்தம் கொதிக்கிறது. இந்த கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் கடுமையான விலை கொடுப்பார்கள் எனு உறுதி அளிக்கிறேன்.