
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. தொடக்கத்தில் காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டங்களில் சிறிய ரக பீரங்கி தாக்குதலை நடத்திய பாகிஸ்தான், திடீரென்று டிரோன்களை ஏவின. அவை அனைத்தையும் இந்தியா முறியடித்தது.
காஷ்மீரை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கெல்லாம் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இருநாட்டு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக நடந்து வந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாநில புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாதம் தொடர்பான வழக்குகள், தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதைபோல சோபியான் மாவட்டத்திலும் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போர் நிறுத்தத்தால் ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.