கிஷ்த்வார்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். அதுபோல, சோஃபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிக்குமாறு ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டன. அதில், பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சத்துக்கும் மேல் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு இதே பரிசு தொகையை மாவட்ட போலீசார் அறிவித்திருந்தனர்.
இதற்கிடையில் கடந்த 16ம் தேதி தெற்கு காஷ்மீர் மாவட்டமான சுக்ரூ கெல்லர், ஷோபியன் மற்றும் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த பகுதியை ஜம்மு-காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடியில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம் சத்ரூவின் சிங்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.
இந்த 4 பயங்கரவாதிகளும் ஜம்மு-காஷ்மீர் போலீசாரால் ரூ.5 லட்சம் பரிசு அறிவித்து தேடப்பட்டு வந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது.
The post ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி: துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.