கல்லூரி வரை அரசின் திட்டங்கள் தொடர்வதால் எழுச்சி: அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மாணவர்கள்

2 hours ago 2

தியாகராஜ நகர்: அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதால் இந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அரசு பள்ளி மற்றும் கல்லூரி, பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை நான் முதல்வன் திட்டத்தில் வழங்கி வருகிறது.

மேலும் உயர் கல்வி என்ன படிக்க வேண்டும் என்னென்ன கல்விகள் உள்ளன என்பது குறித்து சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2025-26ம் கல்வியாண்டிலும் இது தொடர்கிறது, நெல்லை மாவட்டத்தில் தற்போது கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பணி மும்முரமாக நடைபெறுகிறது. 5ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர் 6ம் வகுப்பில் சேர்வதற்கு அருகே உள்ள அரசுப் பள்ளியை தேடி செல்கின்றனர். இதுபோல் 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11ம் வகுப்பு அரசு பள்ளிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் அரசு பள்ளிகளில் தற்போது வழக்கத்தைவிட மாணவர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சில பள்ளிகளில் டோக்கன் கொடுத்து 6ம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அதிகளவில் வருவது மகிழ்ச்சி தருகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர். மாணவர்கள் தரப்பில் கூறுகையில், அரசின் திட்டங்கள் பல பலன் உள்ளதாக உள்ளது. தற்போது படிப்பதற்கு மட்டுமின்றி எதிர்கால உயர் கல்வி தொடரவும், வேலைவாய்ப்பு பெறவும் நான் முதல்வன் திட்டம் வழிகாட்டுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் சேர வந்துள்ளோம் என்றனர்.

The post கல்லூரி வரை அரசின் திட்டங்கள் தொடர்வதால் எழுச்சி: அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article