ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவந்திபோரா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் கூடாரங்களை அழித்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்க, அதற்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கிடையே இருதரப்பு தாக்குதல் முடிவுக்கு வந்தது. எனினும், எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 3 நாட்களில் 6 பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட இரு ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் ஐ.ஜி.பி., வி.கே. பேர்டி மற்றும் மேஜர் ஜெனரல் தனன்ஜெய் ஜோஷி ஆகியோர் விளக்கம் அளித்தனர். ஜம்மு காஷ்மீரின் கேலர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், 13ம் தேதி கேலர் பகுதியை எங்களின் படைகள் சுற்றி வளைத்த போது, பயங்கரவாதிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் ராணுவ படைகள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினோம். இதில், பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினோம்.
அதேபோல, எல்லை கிராமமான டிரால் பகுதியில் 2வது கட்ட ஆபரேஷனை நிகழ்த்தினோம். நாங்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்த போது, பயங்கரவாதிகள் வெவ்வேறு வீடுகளில் பதுங்கியிருந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த நேரத்தில், கிராமத்து மக்களைக் காப்பாற்றுவதே எங்களுக்கு முன் இருந்த சவாலாக இருந்தது. அதன்பிறகு, மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் ஒருவனான ஷாஹித் குட்டே, ஒரு ஜெர்மன் சுற்றுலாப் பயணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு பெரிய தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தான். மேலும், அவந்திபோரா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜம்மு காஷ்மீரில் 3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அவந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.