
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து, அவருடைய வெளிநாட்டு பயண அறிவிப்பு வெளியானது.
அவருடைய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவுக்கு டிரம்ப் முதலில் செல்கிறார். டிரம்பின் வெளிநாட்டு பயணம் மே மாதத்தில் இருக்கும் என கிடைத்த தகவலை பற்றி, நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், அடுத்த மாதம் இருக்கலாம். அதற்கு முன்பே கூட இருக்க கூடும் என்று கூறினார்.
2-வது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இதுவாகும். எனினும், சவுதி அரேபியாவை அவர் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அவருடைய முதல் பதவி காலத்தின்போது, அமெரிக்காவில் 45,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா உறுதியளித்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.
இந்த முறை அமெரிக்க நிறுவனங்களில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா உறுதியளித்து உள்ளது. இதனால், அந்நாட்டுக்கு அவருடைய முதல் பயணம் அமைகிறது.
டிரம்ப் இதுபற்றி கூறும்போது, பொதுவாக தலைவரான பின்னர், நீங்கள் இங்கிலாந்துக்கு முதலில் போக கூடும். கடந்த முறை, நான் ஜனாதிபதியானபோது, சவுதி அரேபியா 45,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்தது. 2-வது முறை பதவியேற்ற பின்னர், இந்த மதிப்பானது 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இரட்டிப்படைந்து உள்ளது என்றார்.
எப்போதும் மற்றவற்றை விட வேலையே முக்கியம் என நான் பார்க்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த பயணத்தில் உக்ரைன் போர் பற்றிய விசயமும் பேசப்படும்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடு என வரும்போது, டிரம்ப் நிர்வாகம் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையேயான நட்புறவு எந்தளவுக்கு நெருங்கியுள்ளது என்பதற்கான அடையாளங்களில் ஒன்றாக டிரம்பின் இந்த பயண திட்டம் பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அதற்கான திட்டமிடல் பணிகளில் வெள்ளை மாளிகை ஈடுபட்டு வருகிறது.