
சென்னை,
சவாலான குற்ற வழக்குகளை முடித்து வைப்பதில் கெட்டிக்காரரான போலீஸ் அதிகாரி நவீன் சந்திராவிடம், கொடூரமான கொலைகளை செய்து வரும் ஒரு சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவருக்கு உதவியாக திலீபன் என்ற சப்-இன்ஸ்பெக்டரும் நியமிக்கப்படுகிறார்.
வழக்கு விசாரணையின்போது, எதிர்பாராத பல அதிர்ச்சிகளையும், ஆச்சரியங்களையும் நவீன் சந்திரா எதிர்கொள்கிறார். ஒருகட்டத்தில் கொலைகாரனை நெருங்கும் சூழலில் அதிர்ந்து போகிறார். நவீன் சந்திரா, அந்த கொலையாளியை கண்டுபிடித்தாரா, இல்லையா? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
கடுப்பான முகம், விறைப்பான நடை என கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நவீன் சந்திரா கலக்கி இருக்கிறார். கொலைக்கான பின்னணியை ஆராயும் இடங்களில் ரசிக்க வைக்கிறார். கொலையாளியை கண்டுபிடிக்கும் இடம் உச்சபட்ச 'திரில்' அனுபவம். நவீன் சந்திராவுக்கு பக்கபலமாக திலீபன் கவனம் ஈர்க்கிறார். கல்லூரி நிர்வாகியாக வரும் அபிராமி அனுபவ நடிப்பை கொட்டியுள்ளார். ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய் என அனைவருமே தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடித்து கொடுத்திருக்கிறார்கள்.
கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பரபரப்பாய் நகருகிறது. டி.இமானின் இசை படத்துக்கு உயிரோட்டம். திரில்லர் பாணியில் இது அவரின் முதல் படம். பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் பலவீனம். எளிதாக புரியும் காட்சிகளுக்கு பெரிய விளக்கம் கொடுத்திருக்க வேண்டாம்.
வழக்கமான சைக்கோ கொலையாளி படம் என்றால், யாராலும் யூகிக்க முடியாத புதுமையான விஷயத்தை உள்ளடக்கி ரசிக்கும்படியான படமாக கொடுத்திருக்கிறார், இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ்.
