சென்னை: சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டில் மறுசீரமைப்பு பணி நடைபெற உள்ளதால், ரூ.1.45 கோடியில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கெட், வரும் மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட் மிகவும் பழமையானது. இங்கு காய்கறி, பழங்கள் மற்றும் மீன் மார்க்கெட் என சிறு கடைகள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வரும் சிறப்பு மிக்க மார்க்கெட்டை, மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மார்க்கெட்டில் தற்போது 129 கடைகள் உள்ளன. இருப்பினும், சந்தையில் சரியான கூரை, தரை, விளக்குகள் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வாக மார்க்கெட்டை நவீனமயமாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, ரூ.30 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டையில் நவீன காய்கறி சந்தையை அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை டுபிட்கோ மதிப்பீடு செய்துள்ளது, மேலும் திருத்தப்பட்ட செலவு ரூ.23.97 கோடியாகும். இந்த நவீனமயமாக்கல் திட்டத்தில் புதிய கடைகள் கட்டும் பணி 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் 130 கடைகள், ஒவ்வொன்றும் 5.77 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இரண்டாம் பிரிவில் 60 கடைகள், ஒவ்வொன்றும் 14.77 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. மூன்றாம் பிரிவில் 10 கடைகள், ஒவ்வொன்றும் 19.61 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
கழிப்பறை வசதிகள்: ஆண்கள் (4 எண்ணிக்கை) மற்றும் பெண்களுக்கு (6 எண்ணிக்கை) தனித்தனி கழிப்பறைகள். மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கூடுதல் கழிப்பறை – தலா – 1.
பிரதான மற்றும் துணை பாதைகள்: வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வசதிக்காக சுலபமாக செல்ல 3.5 மீட்டர் அகலம் கொண்ட ஒரு பிரதான பாதை. சந்தையின் உள் பகுதிகளை இணைக்க 2.6 மீட்டர் அகலம் கொண்ட ஒரு துணை பாதை, ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பகுதிகள், சந்தையில் விநியோக மேலாண்மையின் செயல்திறனை மேம்படுத்த பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குவதற்கு இரண்டு நியமிக்கப்பட்ட பகுதிகள், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் நெரிசலை தடுப்பதற்கும் 4 நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளன.
இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்க கிட்டத்தட்ட பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. இறுதியில் இத்திட்டத்திற்கு நிதியளிக்க சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் இருந்து பங்கு ரூ.11.98 கோடி, சென்னை மாநகராட்சியின் பங்கு ரூ.11.99 கோடி. என ரூ.23.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சந்தையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு மாற்றாக தற்காலிக சந்தை தற்போது அமைக்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த தற்காலிக சந்தையில் மொத்தம் 170 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேல் கூரை மற்றும் பேவர்பிளாக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக 4 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில், செலவு ரூ.1.45 கோடியில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அமைக்கப்பட்டு வரும் தற்காலிக சந்தை அடுத்த மாதத்திற்குள் முடிவடைந்து மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு வரும். அதேபோல் தற்போதுள்ள சந்தை ஏப்ரல் மாதம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படவுள்ளது. இதற்காக சுமார் 2 வருடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட் மறுசீரமைப்பு பணி காரணமாக ரூ.1.45 கோடியில் தற்காலிக சந்தை: மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.