சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்துள்ளனர். பாஸ்கரன் (70) மற்றும் வித்யா (65) ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை ஒரு வாரமாக நோட்டமிட்ட சந்தோஷ், சுத்தியலால் அடித்து இருவரையும் கொலை செய்துள்ளான். இருவரும் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சந்தோஷை CCTV காட்சிகளை வைத்து சூரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்
சேலம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர் அம்மாப்பாளையம் எட்டிகுட்டை தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (70). இவரது மனைவி வித்யா (65). வீட்டு முன் மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ராமநாதன் (எ) தினேஷ் மற்றும் வாசுதேவன் (எ) ஆனந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர். மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மூத்த மகன் ராமநாதன், மனைவி, குழந்தைகளுடன் தர்மன் நகரில் தனியாக வசித்து வருகிறார்.
பால் வியாபாரம் செய்யும் இளைய மகன் வாசுதேவன், மனைவி மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். பாஸ்கரன் நேற்று முன்தினம் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து குடும்பத்தினருடன், இன்று (12ம் தேதி) பழநி கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே, நேற்று மாலை மாடியிலிருந்த வாசுதேவன், பால் வியாபார கலெக்சனுக்காக கீழே வந்தார்.
அப்போது வீட்டிற்குள் வித்யா கொலை செய்யப்பட்டும், பாஸ்கரன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டும் கிடந்தனர். உடனடியாக பாஸ்கரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், கடப்பாரை, சம்மட்டி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், தம்பதியின் தலையில் அடித்து படுகொலை செய்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு நேரில் வந்து விசாரித்தார்.
இந்நிலையில் இரட்டை கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்துள்ளனர். இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை ஒரு வாரமாக நோட்டமிட்ட சந்தோஷ், சுத்தியலால் அடித்து இருவரையும் கொலை செய்துள்ளான். கைது செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த சந்தோஷ் (32) கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சேலம் சூரமங்கலம் இரட்டை கொலை வழக்கில் பீகார் மாநில இளைஞர் கைது appeared first on Dinakaran.