கழிவுநீர் கலப்பு, குப்பைகள் கொட்டுவதால் அடையாளம் இழப்பு கருவேலம் மண்டிய கவுசிகா ஆறு காப்பாற்றப்படுமா?

1 hour ago 2

*தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்

*விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் : விருதுநகர் வழியே ஓடும் கவுசிகா ஆறு கருவேல முட்புதராக, குப்பை கிடங்காக கிடக்கிறது. ஆற்றை தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தின் கல்லுப்பட்டி, பேரையூர், எழுமலை, குச்சம்பட்டி வையூர் பகுதி கிராம கண்மாய்கள் மற்றும் காட்டுப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடமலைக்குறிச்சி கண்மாய் வந்து சேர்கிறது.

வடலைக்குறிச்சி கண்மாய் நிறைந்து வெளியேறும் தண்ணீர் கவுசிகா ஆற்றாக உருவெடுத்து சின்னமூப்பன்பட்டி, மீனாட்சிபுரம், விருதுநகரின் உள்பகுதியில் அகமதுநகர், பர்மா காலனி, அன்னை சிவகாமிபுரம், பாத்திமாநகர், ஆத்துமேடு வழியாக குல்லூர்சந்தை அணையை அடைகிறது.

நதிகள், ஆறுகளை போல் கவுசிகா மலைகளில் இருந்து உருவாகவில்லை என்றாலும் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் உருவானது. நிலத்தடி நீருக்கான ஆதாரமாக இன்றும் விளங்குகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கவுசிகா நதிநீர் விருதுநகர் பகுதி மற்றும் நதி ஓடும் பகுதி கிராம மக்கள், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாக இருந்திருக்கிறது. தற்போது, விருதுநகர் நகராட்சி, சிவஞானபுரம், பாவாலி, கூரைக்குண்டு, ரோசல்பட்டி, குல்லூர்சந்தை ஊராட்சிகள் மற்றும் வழித்தட கிராமங்களின் கழிவுநீர் ஓடையாகி விட்டது. கவுசிகாவின் கரையோரங்களில் கட்டிடங்களின் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து விட்டது.

விருதுநகர் நகராட்சியில் பாதாளச்சாக்கடை திட்டம் கடந்த 19 ஆண்டுகளாக முழுமை பெறாத நிலையில் விருதுநகர் நகராட்சியில் உள்ள 22 ஆயிரம் குடியிருப்புகளின் கழிவுநீர் இன்று வரை கவுசிகாவில் கலந்து வருகிறது.

சுற்றுப்பகுதி ஊராட்சிகளில் உள்ள 40 ஆயிரம் குடியிருப்புகளின் கழிவுநீரும் ஆற்றில் கலப்பதால் கவுசிகா ஆறும், ஆற்றில் உள்ள குல்லூர்சந்தை அணைக்கட்டும் கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. குல்லூர்சந்தை அணையின் 2,463 ஏக்கர் பாசன நிலப்பரப்பளவும் தரிசாக கிடக்கிறது.

இந்நிலையில் கவுசிகா ஆற்றை தூர்வார வேண்டும். விருதுநகர் நகராட்சியின் பாதாளசாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும்.

அத்துடன் ரோசல்பட்டி, கூரைக்குண்டு, சிவஞானபுரம், ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்ட நிலையில், ரோசல்பட்டி, கூரைக்குண்டு, சிவஞானபுரம் பகுதி கழிவுநீர் கவுசிகாவில் கலக்காமல் விருதுநகர் நகராட்சி பாதாளச்சாக்கடை இணைப்புகளில் இணைத்து சுத்திகரிப்பு செய்து, தண்ணீரை தூய்மைப்படுத்தி விட வேண்டும்.

மேலும் விருதுநகர் பகுதியில் கவுசிகா ஆற்றில் தடுப்பாணை கட்டினால் நிலத்தடிநீர் மட்டம் உயரும், இதனால் விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி குடியிருப்புகளுக்கான தண்ணீர் தேவை பூர்த்தியாகும். தாமிரபரணி திட்டத்திற்கு பல நூறு கோடி செலவிடப்பட்டும் விருதுநகரை சுற்றிய பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத நிலை தொடர்கிறது. கவுசிகா ஆற்றை தூர்வாரி பராமரித்தால் விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி குடியிருப்புகளில் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

கவுசிகா ஆற்றில் பட்டம்புதூர் குப்பாம்பட்டி அருகில் தடுப்பணை கட்ட ரூ.3.15 கோடி நிதி கோரி அரசுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கே வெளிச்சம். எனவே ஆற்றை தூர்வாரி விரைவில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

2,463 ஏக்கர் பாசன நிலங்கள் தரிசு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன் கூறுகையில், கவுசிகா ஆறு 30 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கருக்கான விவசாய பயன்பாட்டிற்கும் பயன்பட்டது. கழிவுநீர் கலப்பால் குல்லூர்சந்தை அணை நீர் விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அணையின் 2,463 ஏக்கர் பாசன நிலமும் தரிசாக கிடக்கிறது.

கவுசிகா ஆற்றை தூர்வாரி, விருதுநகர் பகுதியில் தடுப்பணை கட்டவும், நகராட்சி, ஊராட்சிகளின் கழிவுநீர் கலப்பை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுசிகாவில் தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நகரின் குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டிற்கான நீர் தேவையை பூர்த்தி செய்யலாம். மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிமுக ஆட்சியில் அரைகுறை வேலை

அதிமுக ஆட்சியில் 2013ல் கவுசிகா ஆற்றை தூர்வார ஒதுக்கிய ரூ.3 கோடி நிதியில் முட்களை மட்டும் அகற்றினர். அதன்பின் 2020ல் அதிமுக ஆட்சியில் அணையை தூர்வாரி மராமத்து செய்ய ஒதுக்கிய ரூ.6.50 கோடி நிதியில் அரைகுறையாக கரைகளை மட்டும் மராமத்து செய்து நிதியிழப்பு செய்துவிட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post கழிவுநீர் கலப்பு, குப்பைகள் கொட்டுவதால் அடையாளம் இழப்பு கருவேலம் மண்டிய கவுசிகா ஆறு காப்பாற்றப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article