செயற்கை இழை ஓடுதள பாதை, இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

3 hours ago 2

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (5.5.2025) நேரு விளையாட்டரங்கம் சென்னை ஒலிம்பிக் அகடமியில் நடைபெற்ற விழாவில், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 8.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 1.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம், ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்வதற்காக அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் மொத்தம் 3.68 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்டார் (STAR SPORTS TALENT AND RECOGNITION ACADEMY) அகாடமி மற்றும் பாரம்பரிய இந்திய தற்காப்பு கலை விளையாட்டை ஊக்குவித்து, பண்டைய கலைகளை பாதுகாத்து மேம்படுத்த கன்னியாகுமரி மாவட்டத்தில் 11.83 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய தற்காப்பு விளையாட்டு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், சேலம் மாவட்டம் மேட்டூர், ஆத்தூர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, மேலூர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, தருமபுரி மாவட்டம் பென்னகரம், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், ஆத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆகிய 18 சட்டமன்ற தொகுதிகளில், தலா 3 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விளையாட்டரங்கங்கள் கட்டும் இந்நிகழ்ச்சியில், தலைசிறந்து விளங்கிய விளையாட்டுத்துறை சார்ந்த நபர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டில் 7 பிரிவுகளில் தலைசிறந்து விளங்கியதற்காக 2 வீரர், 2 வீராங்கனைகள், 2 பயிற்றுனர்கள், 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 1 நன்கொடையாளர், 1 ஒருங்கிணைப்பாளர் மற்றும் 1 விளையாட்டு நடுவருக்கும். 2021-22 ஆண்டில் 6 பிரிவுகளில் தலைசிறந்து விளங்கியதற்காக 2 வீரர், 2 வீராங்கனைகள், 2 பயிற்றுனர்கள், 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 1 ஒருங்கிணைப்பாளர் மற்றும் 1 விளையாட்டு நடுவருக்கும். 2022-23ம் ஆண்டில் 5 பிரிவுகளில் தலைசிறந்து விளங்கியதற்காக 2 வீரர், 2 வீராங்கனைகள், 2 பயிற்றுனர்கள், 2 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 1 ஒருங்கிணைப்பாளருக்கும், 2023-24ம் ஆண்டில் 6 பிரிவுகளில் தலைசிறந்து விளங்கியதற்காக 2 வீரர். 2 வீராங்கனைகள், 2 பயிற்றுனர்கள், 1 உடற்கல்வி ஆசிரியர், 1 நன்கொடையாளர், மற்றும் 1 ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 39 நபர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகளையும், இதில் 31 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் துணை முதலமைச்சர் வழங்கினார்.

நலிந்த நிலையில் உள்ள 21 முன்னாள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒய்வூதிய ஆணை மற்றும் ஒய்வூதியம் பெற்று வந்து மரணமடைந்த 5 பயனாளிகளின் வாரிசாதாரருக்கு குடும்ப ஓய்வூதிய ஆணை மற்றும் நிலுவை தொகையாக ரூ. 8.99 லட்சத்திற்கான காசோலைகளையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கணொலி காட்சி வாயிலாக அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர்கள் என்.ராமசந்திரன், அசோக் சிகாமணி, முதலமைச்சர் விளையாட்டு விருதாளர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post செயற்கை இழை ஓடுதள பாதை, இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article