சென்னையில் நட்சத்திர ஓட்டலில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி வைரம் கொள்ளையில் தூத்துக்குடியில் 4 பேர் அதிரடி கைது: புகார் அளித்த 12 மணி நேரத்தில் சென்னை போலீஸ் நடவடிக்கை

2 hours ago 2

சென்னை: சென்னையில் நட்சத்திர ஓட்டலில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்புள்ள வைரங்களை கொள்ளையடித்த 4 பேரை தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கூண்டோடு சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகர் 17வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (69). தொழிலதிபரான இவர், வைரக்கல் வியாபாரம் மற்றும் பெரிய அளவில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

மதுரையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 17 கேரட் வைர நகைகளை விற்பதற்காக இடைத்தரகர்களான சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராகுல் (30), மணலி சேக்காடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (45) மற்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பன் (45) ஆகியோரை சந்திரசேகர் அணுகியுள்ளார். இதையடுத்து வைரத்தை வாங்குவதற்காக இடைத்தரகர்கள் தங்களுடன் ராஜன் (லண்டனில் வசித்து வருகிறார்) என்பவரையும், அவரது நண்பர் விஜய், உதவியாளர் அருணாசலம் ஆகியோரையும் அழைத்துக் கொண்டு அண்ணாநகரில் உள்ள சந்திரசேகர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் வைத்திருந்த 17 கேரட் வைர நகையை பரிசோதித்ததுடன், அதற்கு ரூ.23 கோடி விலை பேசி உறுதியளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சந்திரசேகரை நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட இடைத்தரகர்கள், நகை வாங்கும் நபர்கள் அதற்கான பணத்தை கொண்டு வந்திருப்பதாகவும், அதை சென்னை வடபழனியிலுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் வைத்து தருவதாகவும் கூறி, சந்திரசேகரை அழைத்துள்ளனர். அதன்படி ஓட்டலுக்கு தனது வளர்ப்பு மகள் ஜானகி (27), அவரது நண்பர் சுப்பிரமணி, கார் ஓட்டுனர் ஆகாஷ் (27) ஆகியோருடன் வைர வியாபாரி சந்திரசேகர் சென்றார். அங்கு புரோக்கர்கள் கூறிய 636 எண் அறைக்கு சந்திரசேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் வைர நகையுடன் சென்றுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் சந்திரசேகர் வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது வளர்ப்பு மகள் ஜானகி, அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு சந்திரசேகரை சேரில் கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு, வைர நகையை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து வளர்ப்பு மகள் ஜானகி நட்சத்திர ஓட்டல் மேலாளர் உதவியுடன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி தி.நகர் துணை கமிஷனர் குத்தாலிங்கம், வடபழனி உதவி கமிஷனர் கவுதமன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வைர வியாபாரி சந்திரசேகரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சந்திரசேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தி.நகர் துணை கமிஷனர் குத்தாலிங்கம் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு கொண்டு ெசன்றார். உடனே கமிஷனர் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர் வைர வியாபாரியின் வளர்ப்பு மகள் ஜானகி, ஓட்டுனர் ஆகாஷ் மற்றும் இடைத்தரகர்கள் ராகுல், ஆரோக்கியராஜ் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். வைர நகைகளுடன் தப்பிச் சென்ற கும்பல் கருப்பு நிற சொகுசு காரில் சென்றது நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. தனிப்படையினர் அந்த காரின் பதிவு எண்களை வைத்து தமிழகம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினர்.

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு வரை அந்தந்த மாவடட போலீசார் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே நேற்று அதிகாலை 2 மணி அளவில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் கருப்பு நிற சொகுசு கார் வந்துள்ளது. ஆனால் அந்த காரில் டோல்கேட் கட்டணத்தை கட்ட பயன்படும் ‘பாஸ்டேக்’ ஒட்டப்படவில்லை. இந்நிலையில் அந்த காரில் வந்தவர்களுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த டோல்கேட் ஊழியர்கள், அருகில் உள்ள புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புதியம்புத்தூர் போலீசாரை கண்டதும், காரை திருப்பி அந்த கும்பல் தப்பிச் செல்ல முயன்றுள்ளது. இருப்பினும் புதியம்புத்தூர் போலீசார் அவர்களை மடக்கினர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வடபழனி நட்சத்திர ஓட்டலில் இருந்து வைரங்களை கடத்திக் கொண்டு தூத்துக்குடி வழியாக தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் சென்னை அய்யப்பன்தாங்கல் கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ஜான் லாய்ட் (34), சென்னை வளசரவாக்கம், காமாட்சி நகர், திருப்புகழ் தெருவைச் சேர்ந்த விஜய் (24), திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, வள்ளி கொல்லம்மேடு, சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த ரத்தீஷ் (28), ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, பொன்னையாபுரத்தைச் சேர்ந்த அருண்பாண்டியராஜன் (32) என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து வைர நகைகளுடன் பிடிபட்ட 4 பேர் குறித்து சென்னை போலீசாருக்கு தூத்துக்குடி போலீசார் தகவல் அளித்தனர். தனிப்படை போலீசார் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றனர். பிறகு சென்னை தனிப்படையினரிடம் ரூ.23 கோடி மதிப்புள்ள வைரங்களுடன் 4 குற்றவாளிகளை தூத்துக்குடி போலீசார் ஒப்படைத்தனர். பிறகு 4 பேரையும் தனிப்படையினர் சென்னைக்கு நேற்று அழைத்து வந்து வைர கொள்ளையின் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.23 கோடி வைர கொள்ளை தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கூண்டோடு சென்னை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

* பெண் தொழிலதிபரை சந்திக்க வருகை
ரூ.23 கோடி வைரங்களுடன் பிடிபட்ட 4 பேரும், கொள்ளையடித்த வைரத்தை விற்பதற்காக தூத்துக்குடியில் உள்ள பெண் தொழிலதிபர் ஒருவரை சந்திக்க கொள்ளையடித்த கையோடு தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். இதனால் அந்த பெண் தொழிலதிபர் யார், கடத்தல் கும்பலுக்கு அவருக்கு என்ன தொடர்பு என்பது குறித்து தூத்துக்குடி எஸ்பி தலைமையிலான தனிப்படையினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

* விமானத்தில் வந்த சென்னை போலீசார்
தூத்துக்குடி சுங்கச்சாவடியில் வைரம் கடத்தல் கும்பல் பிடிபட்டதை தொடர்ந்து, சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று காலை 7.15 மணி விமானத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தனர். வைரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரையும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் சென்னை தனிப்படை போலீசாரிடம் புதியம்புத்தூர் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த ெசன்னை போலீசார் ஒரு இன்னோவா காரில் ஏற்றி சென்னைக்கு சென்றனர். குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரை தனிப்படையை சேர்ந்த எஸ்ஐ ஒருவர் சென்னைக்கு ஓட்டிச் சென்றார்.

* இலங்கைக்கு தப்ப முயற்சி
பிடிபட்ட வைர கடத்தல் கும்பல், தூத்துக்குடி வழியாக படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தூத்துக்குடியில் உள்ள நகை வியாபாரி யாரேனும் பிடிபட்ட 4 பேருடன் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் நட்சத்திர ஓட்டலில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி வைரம் கொள்ளையில் தூத்துக்குடியில் 4 பேர் அதிரடி கைது: புகார் அளித்த 12 மணி நேரத்தில் சென்னை போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article