சென்னை: மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கஅனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் சமீப காலமாக அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த நபர்களால் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 2ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் 5 நாட்டுப் படகுகள் கடலில் அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்தவர்களால் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டனர்.
இதுபோன்ற சம்பவங்ள் மீண்டும் நிகழாமல் இருக்க தொடர்புடைய அதிகாரிகளிடம் இப்பிரச்னையை எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 மீன்பிடி படகுகளை உடைத்து கடலில் மூழ்கடிக்க உள்ளதாக தெரிகிறது, மீன்பிடி படகுகளை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு இதனால் பேரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 229 மீன்பிடி படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அவர்கள் இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 12 மீன்பிடி படகுகளுடன் 101 மீனவர்களையும், 14 மீட்பு படகுகள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள கருத்துருவிற்கு வெளியுறவு அமைச்சகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இப்பிரச்னைகளை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று, இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை சேதப்படுத்தி கடலில் மூழ்கடிப்பதை தடுக்கவும், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடி படகுகளையும் மீட்டுக் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.
The post படகுகளை உடைத்து வேறு தேவைக்கு பயன்படுத்துவதை தடுத்து இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.