பாலக்காடு: பாலக்காடு அருகே பாலக்கயம் ஆற்றில் அடித்து வரப்பட்ட காட்டு யானை உயிரிழந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகா சிறுவாணி அணைக்கு செல்லும் வழியில் பாலக்கயம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வனத்தில் இருந்து வெளியேறி காட்டு யானைகள் உலா வந்தது. இந்த கூட்டத்தில் இருந்து ஒரு யானை வழித்தவறி பாலக்கயம் ஆற்றுப்பகுதிக்கு வந்துள்ளது. அப்போது பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் இறங்கி ஆற்றை கடக்க யானை முயன்றுள்ளது. இதில், யானை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஆற்றின் கரையோரத்தில் அந்த யானை உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மன்னார்க்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானை சடலத்தை ஆய்வு செய்தனர். இதில் காட்டு யானை 4 நாட்கள் ஆற்று நீரில் அடித்து வரப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் யானை சடலத்தை வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
The post பாலக்காடு அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.