
சென்னை,
சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட திருநகர் பகுதியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிகளின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று (30.03.2025) அண்ணாநகர் மண்டலம், வார்டு-95, வில்லிவாக்கம், புதிய ஆவடி சாலை, திருநகர் பகுதியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் சென்னைக் குடிநீர் வாரியத்தின் பயன்பாட்டிற்காக அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஜெட்ராடிங் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தினை பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றியழகன், மண்டலக் குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், மாமன்ற உறுப்பினர்கள் சுதா தீன தயாளன், டி.வி.செம்மொழி, லதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.