
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியிருக்கும் சூழலில் வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்தது.
எனினும் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்தது. மதிய வேளையிலும் வெயில் கடுமையாக இருந்தது. ஆனால் பிற்பகலில் திடீரெனெ வானிலை மாறியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் அம்பத்தூர், ஆவடி, பொழிச்சலூர், பல்லாவரம், நுங்கமபாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.