சென்னை,
தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் மற்றும் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததற்காக சென்னையில் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு 554 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 232 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பட்டாசு வெடித்ததால் மட்டும் 150 தீ விபத்துகளும், அதில் ராக்கெட் வெடியினால் மட்டும் 107 தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 544 நபர்கள் தீ விபத்தினால் காயமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். சென்னையில் மட்டும் 48 தீ விபத்துகளும், அதில் ராக்கெட் வெடியால் 38 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. சென்னையில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்துகள் மற்றும் மற்ற தீ விபத்துகளினால் 95 பேர் காயமடைந்துள்ளனர்.