சென்னையில் 2 கவுன்சிலர்கள் உள்பட 4 பேரை பதவிநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

3 days ago 3

சென்னை: சென்னை மாநகராட்சியில் இரு கவுன்சிலர்கள் தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் ஆகியோர் உள்ளாட்சி விதிகளை மீறியதாக பதவி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரத்தில் 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
நமது மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள். அதாவது, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்றன. நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் தொடர்பான 1998 ஆம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்நிலையில், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்ட நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வரும் 4 பிரதிநிதிகள் மீது அரசு, அச்சட்டத்தின் பிரிவு 52-ன்கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது.

(1) வ.பாபு, 189-வது வார்டு உறுப்பினர். பெருநகர சென்னை மாநகராட்சி.
(2) கே.பி.சொக்கலிங்கம், 5-வது வார்டு உறுப்பினர். பெருநகர சென்னை மாநகராட்சி.
(3) ச.ஜெயபிரதீப், 40-வது வார்டு உறுப்பினர் மற்றும் 3-வது மண்டலக்குழுத் தலைவர். தாம்பரம் மாநகராட்சி.
(4) க.சகுந்தலா 11-வது வார்டு உறுப்பினர் மற்றும் உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர். ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் 2 கவுன்சிலர்கள் உள்பட 4 பேரை பதவிநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article