
கவுகாத்தி,
18-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கெய்க்வாட் 63 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
3-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஏற்கனவே பெங்களூருவிடமும் தோற்று இருந்தது. தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்றிருந்த ராஜஸ்தானுக்கு முதலாவது வெற்றியாகும்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இதன் காரணமாக ராஜஸ்தான் அணியின் கேப்டனான ரியான் பராக்கிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.