
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் 62 ரன், பெத்தேல் 55 ரன், ஷெப்பர்ட் 53 ரன் எடுத்தனர்.
சென்னை தரப்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மாத்ரே 94 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் என்கிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ரொமாரியோ ஷெப்பர்ட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து அசத்தியதன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன் விவரம்,
விராட் கோலி நடப்பு சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 505 ரன்கள் எடுத்துள்ளார். கோலி ஒரு சீசனில் 500-க்கு மேல் ரன் எடுப்பது இது 8-வது முறையாகும். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிக முறை 500 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 7 முறை எடுத்திருந்தார்.
விராட் கோலி சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக மட்டும் 1,146 ரன்கள் சேர்த்துள்ளார். குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
ஐ.பி.எல்.-ல் அதிக அரைசதங்களை பதிவு செய்துள்ள டேவிட் வார்னரின் (62 அரைசதம்) சாதனையையும் கோலி சமன் செய்தார்.
இப்போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஆர்சிபி அணிக்காக 300 டி20 சிக்ஸ்களை அடித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இப்போட்டியில் விராட் கோலி 53 ரன்களை கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 8500 ரன்களைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 8500 ரன்களை பூர்த்தி செய்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.