சென்னை விமான நிலையத்தில் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் திட்டம் அமல்: விமான பயணிகள் மகிழ்ச்சி

2 weeks ago 5

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் இந்திய பயணிகளின் வசதிக்காக பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன்-டிரஸ்டட் டிராவலர் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷா காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனால் குடியுரிமை சோதனை பிரிவில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதால் விமான பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு குடியுரிமை சோதனை பிரிவு மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. அங்கு பயணிகள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்து நின்று, அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையாக பதிலளித்து வெளியே வருவதற்குள் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையில் வெளிநாட்டில் இருந்து வரும் இந்திய பயணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில், பாஸ்ட்டிராக் இமிக்ரேஷன்-டிரஸ்டட் டிராவலர் புரோகிராம் (FTI-TTP) எனும் புதிய திட்டத்தை இந்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகள், பூர்வீக இந்தியர்களாக இருந்து தற்போது வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் மூலமாகப் பலனடைய முடியும்.

இதன்மூலம் பலன் பெற விரும்புபவர்கள், இதற்கென தனியே உருவாக்கப்பட்ட இணையதள முகவரியில், பெரியவர்கள் ரூ.2 ஆயிரம், குழந்தைகள் ரூ.1000, வெளிநாடுவாழ் இந்தியர்கள் 100 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி, தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களின் பெயர்களை கட்டணத்துடன் பதிவு செய்யும்போது, அவர்களின் முக அடையாளங்கள், கைவிரல் ரேகைகள், கருவிழி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். இவர்கள் இந்திய பயணத்தின்போது, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள தனி கவுன்டர்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம், அவர்களுடைய முகம் அடையாளங்கள் பரிசோதிக்கப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட்டில் குடியுரிமை முத்திரை விரைவில் பதிக்கப்பட்டு குடியுரிமை சோதனைகள் முடிந்து, அடுத்தகட்ட பாதுகாப்பு சோதனைக்கு சென்றுவிடலாம்.

இந்த அதிநவீன பாஸ்ட் டிராக் திட்டத்தை அகமதாபாத் விமானநிலையத்தில் இருந்து நேற்று மாலை காணொலி காட்சி வாயிலாக ஒன்றிய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் நேற்று இரவு 8.30மணி முதல் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் சிஸ்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து குடியுரிமை பிரிவில் நீண்ட நேர காத்திருப்புக்கு முடிவு கிடைத்ததில் ஏராளமான பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post சென்னை விமான நிலையத்தில் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் திட்டம் அமல்: விமான பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article