சென்னை,
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறையினர் தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். இதில் அந்த இளைஞர் உள்ளாடைக்குள் சிறிய பார்சலை மறைத்து தங்கம் கடத்தியது தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், குருவியாக தங்கத்தை கடத்திய இளைஞரை கைது செய்தனர். இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.