'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' தமிழகம் முழுவதும் வீடு, வீடாக இன்று விண்ணப்பம் வினியோகம்

6 hours ago 4

சென்னை,

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளநிலையில், தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் 6 வார்டுகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் வருகிற 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம், வருகிற 15-ந்தேதி முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் வருகிற 15-ந்தேதி, மாதவரம் மண்டலத்தில் வார்டு - 25, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு - 38, திரு.வி.க நகர் மண்டலத்தில் வார்டு - 76, தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு - 109, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு - 143 அடையாறு மண்டலத்தில் வார்டு - 168 ஆகிய 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தொடங்கி நடைபெற உள்ளது.

இதனையொட்டி, இன்று (திங்கட்கிழமை) 6 வார்டுகளிலும் தன்னார்வலர்கள் வாயிலாக வீடு, வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்குகிறது.

சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், மண்டலம்1 முதல் 15 வரை உள்ள 200 வார்டுகளில் நாள்தோறும் சராசரியாக 6 வார்டுகளில் முகாம்கள் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் தலா 2 முகாம்கள் என மொத்தம் 400 முகாம்கள் வருகிற 15-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று நேரடியாகச் சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article