சென்னை விடுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்: போதையில் மயங்கி கிடந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம்

5 hours ago 5

சென்னை,

வேலூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சமீபத்தில் சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போதை மயக்கத்தில் இருந்தபோது, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து கண்ணீருடன் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான், வேலூரில் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். பட்டப்படிப்பு படித்து முடித்தவுடன் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அருகில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன். 6 மாதங்கள் அங்கு வேலை பார்த்தேன். அதன்பிறகு அந்த வேலை பிடிக்காமல், ராஜினாமா செய்தேன்.

கூடா நட்பின் காரணமாக எனக்கு மது அருந்தும் பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் இருந்தது. என்னுடன் வேலை பார்த்த புளோரிடா என்பவர் எனக்கு நல்ல தோழி ஆவார். அவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் தனியாக சென்று விடுதியில் அறை எடுத்து தங்கி மது அருந்துவோம்.

கடந்த மாதம் 27-ந் தேதி புளோரிடா என்னை மது விருந்துக்கு அழைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்தோம். மதிய உணவுக்கு பிறகு நான் அந்த அறைக்கு சென்றேன். புளோரிடா தனியாக வராமல் தன்னுடன் 2 வாலிபர்களை அழைத்து வந்திருந்தார்.

அவர்களில் ஒருவர் மனாசே (வயது 29). இன்னொருவர் பெயர் ஆக்னசே (30). அவர்கள் இருவரும் தன்னுடைய நண்பர்கள் என்றும், அவர்களை நம்பலாம் என்றும் புளோரிடா என்னிடம் கூறினார். மனாசே சென்னையில் உள்ள விவசாயத்துறை அலுவலகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கிறார். ஆக்னசே சொந்தமாக சென்னையில் தொழில் செய்வதாக தெரிவித்தார். மதுவிருந்தை தொடங்கினோம்.

ஆண்கள் இருவரும் எங்களுடன் உட்கார்ந்து மது அருந்தினார்கள். வயிறு முட்ட குடித்தோம். அதன்பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

அதிகாலை 4.30 மணியளவில் நான், போதை மயக்கத்தில் இருந்து எழுந்தேன். எனது ஆடைகள் கழற்றப்பட்டிருந்தது. நிர்வாண கோலத்தில் படுத்திருந்தேன். என்னுடன், மனாசேவும் நிர்வாண கோலத்தில் ஒன்றாக படுத்திருந்தார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

அவரை தட்டி எழுப்பி சண்டை போட்டேன். அவரும், போதை மயக்கத்தில் ஒரே கட்டிலில் தூங்கி விட்டதாக என்னிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தார். பக்கத்து அறையில் புளோரிடாவும் ஆக்னசேவுடன் தங்கி இருந்தார். நான் புளோரிடாவிடம் சண்டை போட்டேன். அவரும் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்று நழுவினார்.

நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தேன். அதற்கு காரணம், மனாசே என்றும் தெரியவந்தது. வேலூருக்கு சென்று அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். டாக்டர்கள் என்னை பரிசோதனை செய்துவிட்டு, உனக்கு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்று தெரிவித்தனர்.

எனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிந்து கொண்ட எனது தாயார் மிகவும் வருத்தப்பட்டார். நான் சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரி வாயிலாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் என்னை விசாரித்தார்கள். அதன்பிறகு, என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு இளம்பெண் கூறினார்.

ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் சித்ரா, கற்பழிப்பு சட்டப்பிரிவு மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

போதை மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதையில் ஈடுபட்டதாக விவசாயத்துறை ஊழியர் மனாசே கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தோழியான புளோரிடா மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Read Entire Article