சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் உள்பட பல அதிகாரிகள் மாற்றம்

2 weeks ago 6

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் ராமவத் சீனிவாச நாயக் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் சென்னை விமான நிலையத்திற்கு சுங்கத்துறை முதன்மை ஆணையராக தமிழ் வளவன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் 2 பேரும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை முதன்மை ஆணையராக பணியில் இருந்த ராமவத் சீனிவாச நாயக் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர், சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து பணியில் இருந்தார். இந்நிலையில் இவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, ஜிஎஸ்டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையே சென்னை விமான நிலையத்திற்கு சுங்கத்துறை முதன்மை ஆணையராக புதிதாக தமிழ் வளவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவி உயர்வு மூலம் இப்பதவிக்கு வந்துள்ளார்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் சீனிவாச நாயக் மட்டுமின்றி, சென்னை விமான நிலையத்தில், கூடுதல் துணை ஆணையராக இருந்த பெரியண்ணன், துணை ஆணையர்கள் சரவணன், பணீந்திர விஷ்சபியகாதா, அஸ்வத் பாஜி, பாபு குமார் ஜேக்கப், அஜய் பிடாரி மற்றும் உதவி ஆணையர் சுதாகர் ஆகியோர் ஒட்டுமொத்தமாக கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட சுங்கத்துறை உயர் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து சுங்கத்துறையில் மேலும் சில அதிகாரிகளும் இடமாற்றம், அடுத்த சில தினங்களில் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. சுங்கத்துறை மட்டுமன்றி, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறை துணை ஆணையர்கள் தகாரே பூணம் நாக்பூருக்கும், கவுரி சங்கர் ஜிஎஸ்டி பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையில், உயர் அதிகாரிகள் இவ்வாறு திடீரென ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இடமாற்றம்தான் என்றும் கூறுகின்றனர்.

* தமிழ்வளவன் யார்?
சென்னை விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் வளவன் டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை ஆணையராக உள்ளார். இப்போது முதன்மை ஆணையராக பதவி உயர்வு பெற்று, சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே துணை ஆணையராக பணியாற்றியவர். சென்னை விமான நிலையத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சுங்கத்துறை முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் உள்பட பல அதிகாரிகள் மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article