
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை கே.வி. மகாலில் தேமுதிக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சிபணிகள், எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள், திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.
இந்த நிலையில், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை வடபழனி 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். வக்பு சட்டத்தால் இஸ்லாமியர்களின் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். விஜயகாந்துக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 9-ம் தேதி தேமுதிக மாநாடு கடலூரில் நடைபெறும். தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கேப்டன் விஜயகாந்தின் சிலை திறக்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
முன்னதாக கட்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்தார். தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.