
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 62 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து சுனில் நரேன் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது முழுமையாக அணியின் முயற்சி. நாங்கள் மிடில் ஓவர்களில் நன்றாக செயல்பட்டோம். ரகுவன்ஷி, ரிங்கு சிங் பேட்டிங்கில் அசத்தினார்கள். பின்னடைவைச் சந்தித்தாலும் அதிலிருந்து கம்பேக் கொடுத்து அணியின் வெற்றிகளில் பங்காற்ற எனக்கு நானே ஆதரவு கொடுக்கிறேன். நீங்கள் தடுமாறினாலும் நன்றாக முடிக்கக்கூடிய போட்டிகள் இருக்கும்.
நான் எடுத்த அனைத்து விக்கெட்டுகளையும் ரசித்தேன். நான் சிறந்த பீல்டர் கிடையாது. இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் போது ரன் அவுட் செய்வது எப்போதும் நல்லது. அதற்கு முடிந்தளவுக்கு வேகமாக பந்தை சுழற்றி தூக்கி எறிய வேண்டும்.
அழுத்தமான சூழ்நிலையில் கேப்டன் உங்களை நம்பி பவுலிங் செய்யும் வாய்ப்பைக் கொடுப்பதற்கான நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட வீரராக நீங்கள் இருக்க வேண்டுமெனில் போட்டிகள் இல்லாத நேரத்திலும் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.