
டெல்லி,
2ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வென்றது. இதை வெற்றி தினமாக ரஷியா ஆண்டுதோறும் மே 9ம் தேதி கொண்டாடி வருகிறது. அந்த வகையில் 80-ம் ஆண்டு வெற்றி தின கொண்டாட்டம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில், ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. அதிபர் புதின் இந்த வெற்றி தின கொண்டாடத்தில் கலந்துகொள்கிறார். மேலும், இந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு புதின் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பிரதமர் மோடி ரஷியா பயணம் மேற்கொள்வார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், ரஷிய பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ரஷிய பயணத்தை ரத்து செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு பதில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரஷியா செல்ல உள்ளார். அவர் வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.