மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கும் நிலையில், அதற்கு ஏற்ப பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, இந்த வழித்தடங்களில் தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
பயணிகளுக்கு விரைவான, நம்பகத்தன்மையான மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வருகிறது. இதன்காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. நடப்பாண்டில் கடந்த மார்ச்சில் மட்டும் 92.10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றும், இணைப்பு வாகன வசதியை அதிகரிக்கவும் பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.