சென்னை – மும்பை ஐபிஎல் போட்டி; மாநகர பேருந்துகளில் இலவச பயணம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

1 day ago 3

சென்னை: சென்னை – மும்பை ஐபிஎல் போட்டியை காணவரும் பார்வையாளர்கள்,போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மா.போ.கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் ஐபிஎல்-2025 கிரிக்கெட் போட்டி எம்ஏ சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் மார்ச் 23ம் தேதி முதல் நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாள் அன்று போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்திடம் மா.போ.கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில், பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா.போ.கழக பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் மூன்று மணி நேரத்திற்கும் மா.போ.கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மா.போ.கழகம் IPL – 2025 கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் மாநகர் பேருந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து பயணிக்கலாம். பல பேருந்துகளை பயன்படுத்தி மைதானத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம். பார்வையாளர்களின் வசதிக்காக போட்டி முடிந்த பின்பு, தமது இருப்பிடம் செல்ல ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் அண்ணாசதுக்கம் பேருந்து நிலையம், சென்னை பல்கலைக்கழகப் பேருந்து நிறுத்தம், அண்ணாசாலை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் உள்ளிட்ட இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்கிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்கள் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ளது. மேலும், அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை முதல் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை மா.போ.கழக சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளது. எனவே, பார்வையாளர்கள் இப்பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

The post சென்னை – மும்பை ஐபிஎல் போட்டி; மாநகர பேருந்துகளில் இலவச பயணம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article