சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வுப் பேரணி திருவான்மியூர் கடற்கரையில் வரும் 25ம்தேதி நடக்கிறது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரின் 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நெகிழிப் பொருட்களை சேகரித்து அகற்றுதல், நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து தீவிர விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியமும் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்புடன் நெகிழிப் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் நெகிழி சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி திருவான்மியூர் கடற்கரையில் வரும் 25ம்தேதி காலை நடைபெற உள்ளது. மேலும், நிகழ்ச்சியில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இதை தொடர்ந்து, திருவொற்றியூர் மண்டலம் முதல் சோழிங்கநல்லூர் மண்டலம் வரை 15 மண்டலங்களிலும் மாபெரும் நெகழி விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு, நெகிழி தவிர்த்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் மற்றும் வியாபார பெருமக்கள் அனைவரும் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து அதற்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு முகாம், விழிப்புணர்வு பேரணி: 25ம் தேதி திருவான்மியூர் கடற்கரையில் நடக்கிறது appeared first on Dinakaran.