பெங்களூரு: ககன்யான் திட்டத்தில் வீரர்கள் தங்கும் அறை எனப்படும் திரவ உந்துவிசை அமைப்புடன் கூடிய க்ரூ மாட்யூல் தயராக இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தை மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2 கட்டமான முதல் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்துவதற்கான ஆராய்ச்சிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இந்த 2-ம் கட்ட திட்டத்துக்கான க்ரூ மாட்யூலில் திரவ உந்துவிசை அமைப்புகளின் ஒருங்கிணைப்பை இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. துல்லியமான மூன்று-அச்சு கட்டுப்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன இரு-உந்துசக்தி அடிப்படையிலான எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பை (ஆர்சிஎஸ்) இந்த க்ரூ மாட்யூல் கொண்டுள்ளது. இது, க்ரூ மாட்யூல் புரோபல்ஷன் சிஸ்டம் (சிஎம்பிஎஸ்) என்று அழைக்கப்படுகிறது. சிஎம்பிஎஸ் 12 உந்துதல்களை உள்ளடக்கியது. இது ஒவ்வொன்றும் 100என் சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது.
அடுத்த கட்டமாக இந்த க்ரூ மாட்யூலில் ஏவியானிக்ஸ் பேக்கேஜ் அசெம்ப்ளி, எலக்ட்ரிக்கல் ஹார்னஸிங் சரிபார்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகளை விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மேற்கொள்ள உள்ளது. இந்த நடைமுறைகளைத் தொடர்ந்து, க்ரூ மாட்யூல் பெங்களூரில் உள்ள யு ஆர் ராவ் சாட்டிலைட் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு இறுதிக்கட்டமாக ஆர்பிட்டல் மாட்யூல் ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெறும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
The post ககன்யான் திட்டம்.. ஆளில்லா விண்கலனை அனுப்பும் சோதனை: திரவ உந்துவிசை அமைப்புடன் கூடிய விண்கலம் தயார்: இஸ்ரோ தகவல்!! appeared first on Dinakaran.