சென்னை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என நகை பட்டறை உரிமையாளரை மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறிக்க முயன்ற என்ஐஏ குற்றவாளி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் கவுசர் பாய். தொழிலதிபரான இவர், சென்னை சவுகார்பேட்டை நைனியப்பன் தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறைக்கு நேற்று முன்தினம் 5 பேர் வந்து, உரிமையாளர் கவுசர் பாயிடம் ‘நாங்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்’ என்றும், உரிய அனுமதியின்றி நகைப்பட்டறை செயல்படுவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது.
எனவே நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை கேட்டு உரிமையாளர் கவுசர் பாய், 5 பேரையும் பட்டறைக்குள் அனுமதித்தார். பிறகு திடீரென 5 பேரும், ‘நாங்கள் வழக்கறிஞர்கள்’. நீங்கள் வங்கியில் வாங்கிய ரூ.7 லட்சம் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.9 லட்சம் பணம் தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். நான் எந்த வங்கியிலும் கடன் வாங்க வில்லை என்று வங்க மொழியில் கவுசர் பாய் தெரிவித்துள்ளார்.
அப்போது 5 பேருக்கும் வங்க மொழி தெரியாததால் கவுசர் பாய் என்ன சொல்கிறார் என்று புரியாமல் 5 பேரும் திணறியுள்ளனர். உடனே நகைப்பட்டறை முன்பு இருந்த வங்க மொழி தெரிந்த ஒருவரை 5 பேர் அழைத்து உரிமையாளர் என்ன சொல்கிறார் என்று கேட்டு சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி வங்க மொழி தெரிந்த நபர், பட்டறை உரிமையாளர் பேசியதை தமிழில் மொழி பெயர்த்து, எந்த வங்கியில் இருந்து வந்துள்ளீர்கள், வழக்கறிஞருக்கான அடையாள அட்டையை காண்பிக்க சொல்கிறார் என்று கூறியுள்ளார். அதை கேட்டு 5 பேரும் திரு திருவென விழித்துள்ளனர். உடனே 5 பேரும் நாங்கள் சட்ட கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்று சமாளித்துள்ளனர்.
இதனால் சந்தேகடைந்த கவுசர் பாய், அவர்களுக்கு தெரியாமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின்படி யானைக்கவுனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக 5 பேரை பிடிக்க முயன்றனர். அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது,, அவர்கள் பணம் பறிக்க வந்தவர்கள் என்பது தெரியவந்தது.அவர்கள், எம்.கே.பி. நகரை சேர்ந்த வஜகத் அலி(30), முகமது ஆசிப்(21) மற்றும் ஜாபர் சாதிக் அலி(37) என தெரியவந்தது.
ஜாபர் சாதிக் அலி மீது 2017ம் ஆண்டு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் சக்தி சேனா நிறுவன தலைவர் அன்பு ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த வழக்கு இருப்பதும் கோவையில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட வழக்கில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. ஜாமீனில் வந்த ஜாபர் சாதிக் அலி தற்போது தனது நண்பர்களுடன் இணைந்து நகைப்பட்டறை உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து யானைக்கவுனி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
The post சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என கூறி நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்: என்ஐஏ குற்றவாளி உட்பட 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.