![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38923152-udaya333.webp)
சென்னை,
சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையிலாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதை தொடர்ந்து, பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் 190 மீட்டர் நீளத்தில் 2.80 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகளுடன் பயணித்து மரப்பாலத்தை கடந்து அவர்கள் கடற்கரை நீரில் கால் வைத்து மகிழ்வதையும் கண்டு ரசித்தார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் பாதை அமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பெசன் ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அணுகும் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மரப்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.