சென்னை: பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட உள்ளது. இது, நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த 19ம் தேதி முதல், 12 பெட்டிகளுடன் கூடிய ‘ஏசி’ மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இரு மார்க்கமாக தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
ஏசி மின்சார ரயிலில் பல வசதிகள் இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த ரயில் நேரத்தை மாற்றி அமைக்கவும் கருத்துகள் எழுந்தன.இதற்கிடையில், பொதுமக்களிடம் கருத்துகளை ரயில்வே நிர்வாகம் கேட்டது. இதுதவிர, கள ஊழியர்களின் நேரடி தொடர்பு மூலம் பயணிகளின் பதில்கள் பெறப்பட்டன. அலுவலகம் செல்பவர்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை ரயில் (49004) வருகை நேரத்தை முன்கூட்டியே அதிகரிப்பதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாலையில் அலுவலகம் முடித்து, செல்வோர் வசதிக்காக ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், பயணிகளின் கருத்துகளுக்கு ஏற்ப, ஏசி மின்சார ரயிலின் கால அட்டவணை மே 2ம் தேதி (நாளை) முதல் மாற்றப்பட உள்ளது. அதன்படி, முதல் ஏசி மின்சார ரயில் சேவை தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டுக்கு காலை 7.35 மணிக்கு சென்றடையும். 2வது ஏசி மின்சார ரயில் சேவை செங்கல்பட்டில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை காலை 9.25 மணிக்கு வந்தடையும்.
3வது சேவை, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.41 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை காலை 10.36 மணிக்கு அடையும். 4வது ரயில் சேவை, தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை மதியம் 1.55 மணிக்கு அடையும். 5வது ரயில் சேவை, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு மாலை 4 மணிக்கு சென்று அடையும். 6வது ரயில் சேவை செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு மாலை 6 மணிக்கு வந்தடையும்.
7வது ஏசி மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.17 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.50 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். 8வது ரயில் சேவை, செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை இரவு 8.50 மணிக்கு வந்தடையும். 4 ஏசி மின்சார ரயில் சேவை மட்டும் மே 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை திரிசூலத்தில் தற்காலிகமாக நின்று செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை பீச்- செங்கல்பட்டு வழித்தட ஏசி மின்சார ரயிலின் கால அட்டவணை மாற்றம்: பயணிகளின் கோரிக்கைகள் ஏற்பு: நாளை முதல் கூடுதலாக இயக்கம் appeared first on Dinakaran.