சென்னை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மோசடியாக விற்பனை; 3 பேர் கைது: 13 பேருக்கு வலை

1 month ago 6

தென்காசி: சென்னை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 33 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடியாக விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 13 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றின் நெல்லை, தென்காசி மண்டல மாவட்ட மேலாளராக ஆலங்குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் பணியாற்றி வருகிறார். இவர், தென்காசி எஸ்பி சீனிவாசனிடம் அளித்த புகார் மனு: பாவூர்சத்திரம் சந்தோஷ்நகரைச் சேர்ந்த சேர்மத்துரை. இவர் அதே நிறுவனத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தென்காசி மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.

எங்களது நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டியில் உள்ள நிலத்தை நிறுவனத்தின் இயக்குநர்களின் கையெழுத்தை மோசடியாக போட்டு, நிறுவனத்தின் முத்திரைகளை மோசடியாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து சேர்மத்துரை, சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு 5 ஏக்கரும், திருவள்ளூர் மாவட்டம் பூம்புகார் நகரைச் சேர்ந்த செல்வராகவன் என்பவருக்கு 6 ஏக்கரும் விற்பனை செய்துள்ளார்.

மேலும் கடையம் பெரும்பத்து கிராமத்தில் நிறுவனத்திற்குச் சொந்தமான 94 ஏக்கர் நிலத்தில் 22.25 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் சேர்மத்துரை தனது சகோதரர் ராமசாமி என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நிலத்தை ராமசாமி சேர்மத்துரையின் இரண்டு மனைவிகளான ரெபேக்காள், செல்வி மற்றும் சேர்மத்துரையின் மகள் ஹெப்சிராணி ஆகியோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த மோசடிக்கு சேர்மத்துரையின் மற்றொரு சகோதரர் சக்தி கண்ணன் மற்றும் சார்லஸ், முத்துக்குமார், ஜோசப் பால்ராஜ், மதுரை வழக்கறிஞர் சிங்கார வடிவேல், அருள் செல்வன், அமிர்தராஜ், அமல்ராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

மோசடி செய்யப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும். இந்த மோசடி குறித்து தெரிய வந்த தனியார் நிறுவனம் சேர்மத்துரையை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. மேலும் சேர்மத்துரை நிலத்தை மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு திரும்ப நிலத்தை நிறுவனத்திற்கு ஒப்படைத்து விடுவதாகவும், நிறுவனத்திற்கு தர வேண்டியதாக ரூ.66.05 லட்சத்திற்கு கடன் உறுதிமொழியும் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அதன்படி சேர்மத்துரை கொடுக்கவில்லை. இதன் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சேர்மத்துரை உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், சேர்மத்துரை, ஜோசப் பால்ராஜ், முத்துக்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மோசடியாக விற்பனை; 3 பேர் கைது: 13 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article