சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

5 months ago 16

சென்னை: சென்னை தேனாம்பேட்டை, தொழிலாளர் ஆணையரகத்தில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் வீர ராகவராவ் தலைமையில், முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த் முன்னிலையில், தொழிலாளர் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில், தொழிலாளர்கள் பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற்று வருகின்றனர். தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனம், மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தொழிலாளர்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து உதவித் தொகை வழங்குமாறும், பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்து நிதி உதவி வழங்கிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்களை இவ்வாரியத்தில் பதிவு செய்யுமாறும், மேலும், இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் அமைப்புச் சாரா நலவாரியத்தில் அதிக அளவில் பதிவு செய்யுமாறு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, அரசு செயலாளர் அறிவுறுத்தினார்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை உரிய முறையில் செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்குமாறும், கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கிட உரிய பயனாளிகளை கண்டறியுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியச் செயலாளர் திவ்வியநாதன் வரவேற்றார். தமிழ்நாடு கட்டுமான கழக இயக்குநர் தர்மசீலன் நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் அனைத்து கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், தொழிலாளர் உதவி ஆணையர்கள் மற்றும் தொழிலாளர் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article