சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்கும் கிராமிய கலைஞர்கள் ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 hours ago 4

சென்னை: சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்கும் கிராமிய கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில், தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’வை முதல்வர் மு.க.ஸ்டாலின் முழவு இசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னையில் 18 இடங்களில் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் கனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தரகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னையில் 18 இடங்களில் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு, கிராமிய கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்கும் கிராமிய கலைஞர்கள் ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article