![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/26/35836593-chennai-06.webp)
சென்னை,
சென்னை காவல்துறையில் இரவு ரோந்து பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இப்பணியில் 59 வயதுடைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வயது மூப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இரவு ரோந்து பணியில் இருந்து கமிஷனர் அருண் விலக்களித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சென்னை போலீஸ் துறையில் ஓராண்டு காலத்திற்குள் பணி ஓய்வுபெற உள்ள 59 வயது நிரம்பிய போலீசாரின் வயது மூப்பையும், தங்களது நீண்ட பணிகாலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும், கடின உழைப்பையும் கருத்தில் கொண்டு, 59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரையிலான அனைத்து போலீசாருக்கும் இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக வரும் காலங்களில் 59 வயதை எட்டும் போலீசார் அனைவருக்கும், அவர்கள் பணி ஓய்வுபெறும் நாள் வரை ஓராண்டு காலத்துக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.