ஆபாச குறுஞ்செய்தி.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை

4 hours ago 2

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியோகோ மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஜாக்குலின் மா (வயது 36) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது வகுப்பில் பயிலும் 12 வயது மாணவரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.

அப்போது வகுப்புகள் முடிந்த பின்பு கூடைப்பந்து பயிற்சி என கூறி மாணவர் பள்ளியிலேயே ஆசிரியையுடன் அதிக நேரம் செலவழித்துள்ளாா். மாணவரின் இந்த நடவடிக்கை பெற்றோருக்கு சந்தேகத்தை கிளப்பியது. எனவே ஒருநாள் அவரது செல்போனை பெற்றோர் எடுத்து பார்த்தனர். அதில் ஆசிரியை ஜாக்குலின் தங்களது மகனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கடந்த 2023-ம் ஆண்டு ஜாக்குலினை போலீசார் கைது செய்தனர். இவர் அந்த ஆண்டின் சிறந்த ஆசிரியை என்ற விருதைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் வேலை செய்த பள்ளிக்குச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜாக்குலின் இதேபோல் மற்றொரு மாணவருக்கும் பாலியல் தொல்லை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு கலிபோர்னியா மாகாண கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் ஜாக்குலின் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதனையடுத்து தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஆசிரியை ஜாக்குலின் மாணவர்களின் பெற்றோரிடம் மன்னிப்பு கோருவதாக கூறி கோர்ட்டிலேயே கதறி அழுதார். 

Read Entire Article