
புனே,
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் உத்கர்ஷ் ஷிங்னே(வயது19). இவரது தந்தை டாக்டராக உள்ளார். கடந்த நீட் தேர்வில் 720-க்கு 710 மதிப்பெண் எடுத்த ஷிங்னே மேற்படிப்புக்காக போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து படித்து வந்தார்.
இதற்காக அவர் அங்குள்ள வானோவரி பகுதியில் உள்ள பஞ்சரத்னா அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஷிங்னேவின் வீடு வெகுநேரமாக திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சென்று கதவை தட்டினர். உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது குளியலறையில் ஷிங்னே ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த மாணவரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் வாட்ஸ்-அப்பில் ஷிங்னே ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அதில் பாடத்திட்டத்தில் மாற்றம், வருகை பதிவேடு குறைவு போன்ற காரணத்தால் மனஅழுத்ததில் இருந்ததற்காக மாணவர் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது,
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஆன்லைன் மூலம் புதிதாக கத்தி ஒன்றை ஆர்டர் செய்ததாகவும், அதன்மூலம் தான் கழுத்தை அறுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.