சென்னை,
தமிழகத்தில் மொத்தம் 25 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. இதில் சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம் 10 தளங்களுடன் சுமார் 45 அடி உயரம் கொண்டது. இந்த கலங்கரை விளக்கம் கடந்த 1977-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.
இந்த கலங்கரை விளக்கத்தின் 9-வது தளம் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. 10-வது தளத்தில் உயர் பாதுகாப்பு ரேடார் ஆண்டனா உள்ளதால், அங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ரேடார் ஆண்டனா மூலம் சுமார் 100 கி.மீ. வரை கடலில் செல்லும் கப்பல்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரேடார் ஆண்டனா கடந்த ஒரு மாதமாக பழுதாகி இருந்ததால், அதனை மாற்ற வேண்டும் என பெங்களூருவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு கடலோர காவல் படையினர் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெல் நிறுவன ஊழியர்கள் இன்று சென்னை கலங்கரை விளக்கத்தில் உள்ள ரேடார் ஆண்டனாவை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த 3 நாட்களுக்கு சென்னை கலங்கரை விளக்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தில் உள்ள ரேடார் ஆண்டனா சுமார் சுமார் 1,500 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் சுமார் 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.