சென்னை,
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் சின்ன ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உரிமையில்லை என்கிற எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டது.
ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடைவிதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அந்த தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.