சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பரவலாக மழை பெய்தது. அதிலும் நேற்று காலை பல இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது.
இதையடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. சில இடங்களில் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து நாளை (அக்.17) காலை முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று முழுவதும் மழை பெய்யாததால் இரவு பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நாளை முடிவெடுக்கப்படும் என்றும் மாநகராட்சிப் பகுதியில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மண்டல அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.