செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலை கலெக்டர்கள் வெளியிட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025ன் நிகழ்வாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலானது நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அருண்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டார்.
இதில் 18 வயது முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்கள் 4,362 பேர், ஆக மொத்தத்தில் 7 சட்டமன்ற தொகுதியில் அடங்கிய ஆண் வாக்காளர்கள் 13,57,923 பேர், பெண் வாக்காளர்கள் 13,89,146 பேர், இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 481 பேர், ஆக மொத்தம் 27 லட்சத்து 47 ஆயிரத்து 550 பேரில் 18 வயது முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்கள் மொத்தம் 37749 பேர் ஆகும். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார் ஆட்சியர் (பயிற்சி) மாலதி ஹெலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் அமீது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட, சப்-கலெக்டர் ஆஷிக் அலி பெற்றுக்கொண்டார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2005 தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்-2025 பணிகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து, கடந்த 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேற்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.மேற்படி, சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் தேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட 37,065 படிவங்களில் 36,803 படிவங்களும், நீக்கல் தொடர்பாக பெறப்பட்ட 10,563 படிவங்களில் 10,281 படிவங்களும் முறையான கள விசாரணை செய்து ஏற்பளிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025க்கான இறுதி வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டது.இந்த, இறுதி வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்.
மேலும், இன்று முதல் தொடர் திருத்தம் நடைபெறுவதால் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக மனுக்களை சம்மந்தப்பட்ட அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் மற்றும் இணையதளம் (Voters.eci.gov.in) வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கலெக்டர் (பயிற்சி) ந.மிருணாளினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலை கலெக்டர்கள் வெளியிட்டனர்: கட்சியினர் பங்கேற்பு appeared first on Dinakaran.