செங்கல்பட்டு ஐடிஐ மைதானத்தில் 307 தனியார் பள்ளி பேருந்துகளை கலெக்டர் ஆய்வு: குறைபாடுள்ள 14 பேருந்துகள் நிராகரிப்பு

3 hours ago 2

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஐடிஐ மைதானத்தில் தனியார் பள்ளி பேருந்துகள் தரம் குறித்த செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் தலைமையிலும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஷமீதா மற்றும் முரளி ஆகியோர் முன்னிலையிலும் தனியார் பள்ளி பேருந்துகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் வந்து ஒவ்வொரு பேருந்துக்குள்ளும் ஏறி பிரேக் சரியாக பிடிக்கிறதா, பேருந்தின் உள்ளே இருக்கைகள் மற்றும் விபத்து காலங்களில் அவசர காலத்தில் தப்பிக்கும் வகையில் அவசர வழி கதவு, படிக்கட்டுகள், உயரம், ரிவர்ஸ்கேமரா, பிளாட்பார்ம் உறுதித்தன்மை, தீயணைப்பு கருவியின் தரம், முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது.அதுமட்டுமின்றி கலெக்டரும் மோட்டார் வாகன ஆய்வாளரும் பேருந்தை ஓட்டிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர், காவல் துணைக்கண்காணிப்பாளர் புகழேந்திகணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் 114 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த மொத்த பள்ளிகளில் செங்கல்பட்டு – 341 பேருந்துகள், திருக்கழுக்குன்றம் – 106 பேருந்துகள், மதுராந்தகம் 161 பேருந்துகள் என மொத்தம் 607 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் முதல்கட்டமாக நேற்று 307 பள்ளி பேருந்துகள் ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டன. இதில் 14 பேருந்துகள் தரத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக நிராகரிக்கப்பட்டன. அவர்களுக்கு பத்து நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு அதற்குள் தரத்தை உயர்த்தி நற்சான்று பெற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட்டது.மேலும் இந்த ஆய்வின்போது ஒவ்வொரு ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர்கள் என அனைவருக்கும் கண்பார்வை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு என மருத்துவர்களை கொண்டு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், பேருந்து சென்று கொண்டிருக்கும்போது தீவிபத்து ஏற்பட்டால் தன்னையும் தங்களை நம்பி வரும் மாணவ-மாணவிகளையும் காப்பாற்றும் விதமாக தீயில் இருந்து எப்படி காப்பாற்றி கொள்வது என்பது குறித்து செங்கல்பட்டு மண்டல தீயணைப்புத்துறை நிலைய உதவி அலுவலர் செந்தில்குமரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

The post செங்கல்பட்டு ஐடிஐ மைதானத்தில் 307 தனியார் பள்ளி பேருந்துகளை கலெக்டர் ஆய்வு: குறைபாடுள்ள 14 பேருந்துகள் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article